திங்கள், 26 ஏப்ரல், 2010

சங்க இலக்கியம் - குறுந்தொகை:9

பச்சைப்பசேலென்ற மரகதஇலைகள்
நீளவளர்ந்த நீலமலர்கள்;
அருகில்
பல்வகை மீன்கள்
குழுக்களாய் வாழும்
தண்ணீர்க் குடும்பமான
அலையாடும் ஆழ்குளம்;
கன்னியரின் கண்களைப்போல
மூழ்கும் கயல்மீன்கள்;
தண்ணென்ற குளிர்ச்சியால்
சில்லிடும்
நெய்தல் நீர்த்துறை;

காதல் நெருப்பை கனல்மூட்டி
விலைமகளிடம் விலைபோனதால் ...

காற்று நுழையவும் முடியாமல்
மணம் வெளியேறவும் முடியாமல்
செப்புக்கலசத்தில்
தனியே சிறைசெயயப்பட்ட
சூடாதமலராய் வாடினாள்!
வாட்டத்தை வெளிப்படுத்தாமல் மூடினாள்!
திசைகள்தோறும் தேடினாள்!
தலைவன்வரும் வழியையே நாடினாள்!
-----------------------------------------

நூல் : குறுந்தொகை
ஆசிரியர்:கயமனார்
பாடல்:9
யாய் ஆகியளே மாஅயோளே
மடைமாண் செப்பில் தமிய வைகிய
பெய்யாப் பூவின் மெய்சாயினளே;
பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்
இனமீன் இருங்கழி ஓதம்மல்கு தோறும்
காயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும்
தண்ணம் துறைவன் கொடுமை
நம்முன் நாணிக் கரப்பாடும்மே.

1 கருத்து: