வெள்ளி, 23 ஏப்ரல், 2010

சங்க இலக்கியம் - குறுந்தொகை : 8

மரகத வயல்வெளியும்
அலையில்லா குளக்கரையும்
ஒன்றையொன்று முத்தமிட்டுக்கொண்டிருக்கும்;
கிளைகளுக்கு விடைகள்சொல்லி
குதிக்கும் மாங்கனிகளைக்
குளிக்கும் மீன்கள் பசியாறும்;
இத்தகைய
அழகிய மருதநிலத்தில்....

அந்த தலைவன்.
என்
வனப்பில் வழுக்கி
வெல்லமொழி போல
செல்லமொழி பேசி
கள்ளத்தனமாக
காமம் நுகர்வது வழக்கம் .

இப்பொழுதோ
செய்வதையே திரும்பச்செய்யும்
கண்ணாடி பிம்பத்தைபோல
உணர்சிகளற்ற பொம்மையாக
வாழ்க்கைத் துணையுடன்
வாழ்ந்து தொலைக்கிறான்.
(பரத்தையின் கூற்று)
-------------------------------------------------------------------------

நூல்:குறுந்தொகை
ஆசிரியர்:ஆலங்குடி வங்கனார்
பாடல் என்:௮
பாடல்:8
கழனி மாஅத்து விளைந்துஉகு தீம்பழம்
பழன வாளை கதூஉம் ஊரன்
எம்இல் பெருமொழி கூறி,தம் இல்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும்,தன் புதல்வன் தாய்க்கே.

1 கருத்து: