வியாழன், 22 ஏப்ரல், 2010

சங்க இலக்கியம் - குறுந்தொகை:7

கழைக்கூத்தாடிகள் கயிற்றிலாடுகையில்
கொட்டப்படும் முழக்கமாய்
வாகைமரத்து கொம்புகளும்
மூங்கில்மர தண்டுகளும்
ஓசை எழுப்புகின்றன,
தீக்குண்டமாய் தகிக்கும்
நெருப்புதேசமான பாலைவெளியில்.

வளையல்கள் ஏழுசுரங்களை இசைக்க
சிலம்புகள் சங்கீதசப்தங்களை எழுப்ப
மெல்லடி வைத்து மெல்லியல் நடக்கிறாள்...
வீரம்செறிந்த கரங்களில்
வில்லேந்தி
வெற்றிச்செறிந்த கால்களில்
கழலேந்தி -அவள்
முன்னே நடக்கிறான் காதலன்.

திருமதி ஆவதற்காய்
செல்வனுடன் செல்லும்
செல்வியின் சிலம்பு
கட்டாயம் மெட்டியாக மாறும்...

-----------------------------------------------------------------
நூல்:குறுந்தொகை
ஆசிரியர்:பெரும்பதுமனார்
பாடல் எண்:7
பாடல்:
வில்லோன் காலன கழலே; தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே; நல்லோர்
யார்கொல்? அளியர் தாமே - ஆரியர்
கயிறு ஆடு பறையின் கால்பொரக் கலங்கி,
வாகை வெண்நெற்று ஒலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னியோரே.

1 கருத்து: