செவ்வாய், 20 ஏப்ரல், 2010

சங்க இலக்கியம் - குறுந்தொகை : 5

வயல்களின் பூமியிலிருந்து
அலைகளின் பூமிக்கு
மீனுண்ணும் நிமித்தமாய்
குருகுப்பறவைகள் சிறகுவிரித்தன;
கரைகளை உடைக்கும்
அலைகளை உடைய
அந்த
தண்ணீர்தேசத்தின் தலைவன்
என்னை
கண்ணீர்தேசத்தில்
விட்டுவிட்டுப் போனதிலிருந்து...

கறுப்புக் கொடிபிடித்து
தூக்கத்திற்கு எதிர்ப்புத்தெரிவிக்கின்றன
மைபூசப்பட்ட என்கண்கள்;
தொட்டுக்கொள்ளாமலும்
ஒட்டிக்கொள்ளாமலும்
தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றன
என்
ஈர இமைகள்
----------------------------------------------------------------------------

நூல்:குறுந்தொகை
ஆசிரியர்:நரிவெரூஊத் தலையார்
பாடல் எண்:
பாடல்:5
அதுகொல்,தோழி! காம நோய்?
வதிகுருகு உறங்கும் இன்நிழற் புன்னை,
உடைதிரைத் திவலை அரும்பும் தீம்நீர்,
மெல்லம் புலம்பன் பிரிந்தென
பல்இதழ்,உண்கண் பாடு ஒல்லாவே.

1 கருத்து: