புதன், 21 ஏப்ரல், 2010

சங்க இலக்கியம் - குறுந்தொகை: 6

வெளிச்சம்தொலைத்த வானும்
ஓசைதொலைத்த பூமியும்
இருட்டை பூசிக்கொண்டு
கறுத்த முகத்தோடு
காட்சியளிக்கும் ராப்பொழுதில்
கவலை களைந்து
கனவில் களித்தபடி
பூமி என்னும்
ஒற்றை படுக்கையில்
எல்லோரும் துயில்கொள்கிறார்கள்.

நிசப்தம்பரவும் நித்திரைபொழுதில்
உறங்காமல் தனித்திருப்பதும்
தனிமைக்கு துணையிருப்பதும்
நான் மட்டும்தான்.
காரணம்
காதலன் அருகில் இல்லை
நள்ளிரவும்
நல்லிரவாய் இல்லை.

----------------------------------------------------------

நூல்:குறுந்தொகை
ஆசிரியர்:பதுமனார்
பாடல் எண்:
பாடல்:6
நள்ளேன்றன்றே, யாமம்; சொல் அவிந்து
இனிது அடங்கினரே,மாக்கள்;முனிவு இன்று
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர்யான் மன்ற துஞ்சாதேனே.

2 கருத்துகள்:

  1. மிக அருமையான இலக்கிய சுடர்களை தாங்கள் வழங்கி வருகிறீர்கள் எனது அன்பரே! தமிழ் சோறு போடுமா என்ற மூடத்தனமான கேள்விகளை எழுப்பியவர்களுக்கு.....தங்களுடைய வலை ஓர் அருமையான பதிலை தந்துகொண்டிருக்கின்றது.
    அண்டத்தின் சத்தங்களுக்கும் உயிரினங்களின் சத்தங்களுக்கும் வடிவத்தைக்கொடுத்து, முறைப்படுத்தி, இலக்கண வடிவம் கொடுத்து, பல ஆயிர வருடங்களுக்குப் பிறகும் இன்று வரை மணிப்போல நிலைத்து நிற்கின்றது. தமிழ் மருத்தில் வேளாண்மையை மேற்கொண்டிருக்கும் தமிழ் அன்பர் திரு.மணிவண்ணன் அவர்களுக்கு, எனது வாழ்த்துகள்! நன்றி

    பதிலளிநீக்கு
  2. தமிழ்மருதத்தோடு இனிய இணைப்பை வழங்கி தமிழை முன்னெடுத்து செல்லும் இனிய தோழர் தீபன் அவர்களுக்கு நன்றிகள் சொல்கிறேன். நம்மை இணைத்த தமிழுக்கு நன்றி சொல்வோம்.வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு