வியாழன், 15 ஏப்ரல், 2010

கங்காரு

அலுவலகத்தில்
காலையில் சிறைப்படும்முன்னும்
மாலை விடுவிப்பிற்குப் பின்னும்
முதன்மைச்சாலையிலிருந்து விலகி
பள்ளியை நோக்கியே பயணிக்கும்
என் இரண்டுச்ச்சக்கரவாகனம்.

அந்த மோட்டார்தேரின்
முன்னிருக்கை சிம்மாசனத்தைக்
குட்டி இளவரசனாய்
ஆக்கிரமிக்கும் ஆசைக்கு
விதித்திருந்த தடையை
மீறியதில்லை என்மகன்.

என்
வயிற்று சுற்றளவை
அளவெடுக்கும் பாவனையோடு
பிஞ்சுக் கைகளால்
உடும்பைப்போல இறுக்கிக்கொண்டும்
போலிஷ் திருடன் விளையாட்டில்
மறைவதைப்போல்
எதிர்ப்படுகிறவர்களுக்குத் தென்படாமல்
என் முதுகின்பின் ஒளிந்தபடி
நிழலாய்ப் பயணிப்பான்.

சிக்னல்
வேகத்தடை
குறுகியவளைவு
மற்றும்
நெடுஞ்சாலைப் பந்தயங்களைக் கடந்து
அன்றையதினமும் தொடர்ந்தது
எங்கள் பயணம்.

பள்ளிவந்து சேர்ந்தபோது
நுழைவாயிலின்
கனத்த உலோகக்கதவுகள்
பூட்டப்பட்டிருந்தன.
பூக்களில்லாத மலர்வனமாய்
ஏகாந்தம் நிரப்பப்பட்டு
வெறிச்சோடியிருந்தது பள்ளிவளாகம்.

மகனை சுமந்துகொண்டிருப்பதான
நினைவில்
வழக்கமாய் அனிச்சையாய்
வந்திருக்கிறேன்
ஞாபகமறதியில்
அன்றையதினம் "ஞாயிற்றுக்கிழமை"

4 கருத்துகள்:

  1. மெலிதான உணர்வை எந்த சிரமும் இன்றி எப்படிச் சொல்ல முடிகிறது உங்களால் மணி?
    Paaki

    பதிலளிநீக்கு
  2. Thats no nice....awesomely put...liked it lots!!
    Cheers...Priya

    பதிலளிநீக்கு
  3. அருமை..!! குழந்தையின் ஸ்பரிசத்தின் இன்பத்தில், அன்பின் அரவணைப்பில், கிழமை என்ன எல்லாமே மறந்து போவோம்..!!

    பதிலளிநீக்கு
  4. Paa Krishnan,PRIYA, deesuresh உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்

    பதிலளிநீக்கு