ஞாயிறு, 4 ஜூலை, 2010

சுதந்திரம் வாங்குவதற்கும் 38-ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட கல்லூரி

இந்திய சுதந்திரம் பெறுவதற்கும் முப்பத்தி எட்டு ஆண்டுகளுக்கு முன் சரியாக ௧௯௦௯ இல் தொடங்கப்பட்டு இன்று நூற்றாண்டு விழா கொண்டாடி இருக்கும் தமிழ்க் கல்லூரி.
வணக்கத்திற்குரிய தமிழ் சான்றோர்களால் எடுத்து வளர்க்கப்பட்டு பல்லாயிரக் கணக்கான தமிழ் பேரறிஞர்களை இந்த தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தந்தந்திருக்கும் தன்னிகரில்லாத தமிழ் கல்லூரி.கணேசர் செந்தமிழ் கல்லூரி என்பதே இதன் முழுப்பெயர்.இந்த கல்லூரியின் முதன்மை நோக்கம் சைவ சமயத்தை வளர்ப்பது என்பதே ஆகும். சைவசமயத்தை தனித்து வளர்க்காமல் தமிழோடு சேர்த்து வளர்த்தெடுக்க வேண்டும் என்ற சிதனைதான் இதனை தமிழ் கல்லூரியாக பரினாமப்பட வைத்தது .இது தாய்த் தமிழுக்கான ஆலமரமரம் கிளைத்து வளர்ந்தது விழுதுகளையும் விருதுகளையும் வழங்கி பலருக்கு சிம்மாசனங்களை சமைத்தும் சிகரங்களை வளர்த்தும் தந்துள்ளது.பேரா.பழ முத்தப்பன்,பேரா.சிதம்பரம், பேரா.மணி,
பேரா.பூங்குன்றன்,பேரா. கனகராஜ்,பேரா.சதாசிவம்,பேரா.ரோஸ்லெட்,பேரா.ராமாயி,
பேரா.திருநாவுக்கரசுபேரா. முருகேசப்பாண்டியன்,பேரா அரங்கநாதன்,முதலானோர் எமக்கு தமிழ் சொல்லித்தந்த பேராசிரிய பெருமக்கள்.தமிழை எனக்கு தந்து என்னை தமிழுக்கு தந்த நான் பயின்ற கல்லூரி கணேசர் செந்தமிழ் கல்லூரி .வணங்குகிறேன்.பெருமையடைகிறேன். இறைவனுக்கு நன்றி சொல்கிறேன்.நீரில் நாம் குளித்து முடிப்பதற்கு முன்பாக வியர்வை நம்மை குளிப்பாட்டிவிடும் நெருப்பு தேசம்.திக்கு தெரியாத காட்டில் என்று சொல்வதைப் போல தமிழ் படிப்பதற்காகவே புதுகையில் விடப்பட்டவன் தான் நான். குளிர் தேசமான உதகையில் பிறந்து அக்கினி பூமியில் வாழ்தல் என்பது சவாலானது தானே.தமிழாசிரியரான என் தந்தை ஆணையிட தலைமையாசிரியையான அன்னை வழிமொழிய கல்விக்காக வனவாசம் வந்தேன்.

மூத்த பிள்ளையை மருத்துவராக்க வேண்டும் பொறியியலாளர் ஆக்க வேண்டும் என்ற என் பெற்றோரின் கனவை என் மேனிலை வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் கலைத்துவிட்டன.மதிப்பெண் பட்டியல் வாங்க பள்ளிகூடத்தில் படிக்கட்டில் ஏறும்போது 'வாத்தியார் பையன் மக்கு ' என்பதற்கு சிறந்த உதாரணம் 'மணிவண்ணன்' என்று என்னை ஆசிரியர்கள் புகழாரம் சூட்டினார்கள்.என்ன படிக்க வேண்டும் ? எதுவாக ஆகவேண்டும் ? என்ற இலச்சியங்கள் இல்லாத அந்த வயதில் முடிவுகளை என் போற்றோர்களிடம் விட்டுவிட்டு தந்தை சொல்லை மந்திரமாக கொண்டதால் இந்த தமிழோடு வாழும் பாக்கியத்தை பெற்றேன். ஏதுமறியாத என்னை நல்ல உயரத்தில் ஏற்றிவைத்த பெருமைக்கு உரிய என் பெற்றோர்களை உள்ளன்போடு நினைத்து பார்க்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக