செவ்வாய், 6 ஜூலை, 2010

ஒரு குடும்ப ஜவுளி

எலிகடித்த
தலையணைக்கு உரை...
மண்ணரித்த சன்னலைமறைக்க
சாளரச்சட்டை...
எழுபதுவயது தாத்தாவின்
குளியலுக்கு கோவணம் ...
சட்டைகாலர் அழுக்காமலிருக்க
அப்பாவுக்கு கழுத்தாடை...
சில்லரைப் பைசாக்களைப்
பத்திரப்படுத்த
பாட்டிக்கு முடிச்சுதுணி...
அக்காபையன்
ஜொள்ளைத் துடைத்துக்கொள்ள
மார்புத்துணி ...
பால்வாடி போகும்
ஏழாவது தம்பி
சளிமூக்கனுக்கு கைக்குட்டை...
சித்தப்பா பையனுக்குக்
கிரிக்கெட் பந்துசெய்ய துணி...
பெரியண்ணியின்
கைக்குழந்தைக்கு இடுப்புத்துணி...
கஞ்சிவடிக்கையில்
கலயங்களுக்கு இடையில்கொடுக்க
வைப்புத்துணி...
வயக்காட்டில் வியர்வைகளை
ஒற்றிக்கொள்ள துடைப்புத்துணி...
காயங்களுக்கு கட்டுப்போட
கிழிசல் துணிக்கீற்றுகள்..
மூத்த தங்கை முதிர்கன்னிக்கு
மூன்று நாட்களுக்கான துணி...

இப்படி
எல்லோருக்கும் எல்லா துணிகளும்
அம்மாவின் ஒரே
பழைய சேலையிலிருந்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக