செவ்வாய், 13 ஜூலை, 2010

பச்சை கொலை

கொலைவெறி கொண்டு
அலைகிறார்கள்...
பட்டப்பகலில்
நட்டநடு தெருவில்
வெட்டும் ஆயுதங்களுடன்
சிலர்.

விரல்கள் உதிர
கரங்கள் சிதற
சிரங்கள் உருள
உயிரும் குருதியும் கசிய
வெட்டுண்டு மடிகிறார்கள்
பலர்.

ஒரு நூற்றாண்டு வாழ்ந்த
தாத்தாக்கள் வெட்டப்படுவதையும்
அரை நூற்றாண்டு வாழ்ந்த
அப்பன்கள் கொல்லப்படுவதையும்
பிள்ளைகளும் பேரர்களும்
வேடிக்கைப்பார்க்கவே செய்தார்கள்
வேதனைக்கொள்ளவே செய்தார்கள் ..

வான்தொட்டு
நிமிர்ந்த கம்பீரங்கள்
தரைதொட்டு புழுதியில்.

நல்ல மனிதர்களைப் போன்ற
சில மரங்களும்
நல்ல மரங்களைப்போல
சில மனிதர்களும் ...


தமிழகத்தின்
நெடுஞ்சாலையோரங்களில்
ஆன்மா சாந்தியடையாமல்
இன்னமும் அலைந்துகொண்டே இருக்கிறான்
அசோகன்.

ரத்தத்தின் நிறம் பச்சை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக