வியாழன், 22 ஜூலை, 2010

சிறகுகளும் விறகுகளும்

கிழக்கின் கூண்டிலிருந்து
அக்னி வெளிவருவதற்கும்
முந்தய கருத்தவிடியலில்
காததூரங்களை கடந்து
இரைதேடி இறகுவிரித்த
தாய்ப்பறவையின்
பசியின் பயணங்கள் முடிவதற்குள்
முன்னிரவு தொடங்கியிருந்தது.

வாய்க்குள் சுமந்துவந்த
இரை
வயிறுக்குள் நுழைந்துவிடாதபடி
லாகவமாய் கொண்டுவந்தது
குஞ்சுகளுக்காய்.

புறப்பட்ட இடம்
வந்து சேர்ந்த பின்னும்
தேடிக்கொண்டே இருந்தது.
தன் இல்லத்தையும்
தன் வாரிசுகளையும்.

பசியில்
விழிதெரியாமல் வழிதெரியாமல்
முகவரியை தவறவிட்டுவிட்டோமோ
என்ற ஆதங்கத்தில்
இரவு கரையும்வரை
காத்திருந்தது .

லட்சோப லட்ச
ஜீவராசிகளின் ஒற்றை இல்லமாய்
இருந்த ஆலமரம்
இறந்துகிடந்ததை
புத்திரர்களை பறிகொடுத்து
பித்துப்பிடித்தலையும்
அந்த தாய்ப்பறவை
விடியலில் தான்
பார்த்தது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக