சனி, 18 டிசம்பர், 2010

புதிய ழ-வில் இடம் பெற்ற சில கவிதைகள்

*
என்றாவது ஒருநாள்
வற்றக்கூடும் என் கண்ணீர்
அன்று எண்ணிக்கொள்
நீ எறிந்த கற்களை
-கவிதாயினி ராஜேஸ்வரி
*

*
பூச்சியொன்றைக் குறிவைத்து
மெல்ல நகர்கிறது
சுவர்பல்லி
பசிக்கும் மரணத்திற்கும்
நடுவில் நான்
-கவிஞர் நானற்காடன்.
*

*
கடவுளுடனான
எல்லைப் பிரச்சனைகளில்
கண்ணிவெடியின்
தாக்குதல்களிலிருந்தும்
கவனமாய்
தப்பித்துக்கொண்டிருக்கின்றன
சாத்தானின் காலடிகள்.
-கவிஞர் பிரக்ளின் குமார்
*

*
பஞ்சாரக் கோழிகள் சிறகடிப்பும்
கட்டிப்போட்ட நாய்களின் உறுமல்களும்
சின்னக் குழந்தை
ஆற்றாமையில் வடிக்கும் கண்ணீரும்
பொருள் கொள்ளாது நிகழ்கிறது
கிடையில்
ஓர் ஆட்டுக்குட்டியின் பிரிவு
-கவிஞர் சங்கரபாண்டியன்
*

*
சந்ததிகள்
வேரருக்கப்பட்டதை எண்ணி
புகைகிறது
அடுப்படியில்
மரம்
-கவிஞர் சுரேஷ்
*

*
உச்சி வெயிலில்
ஏதேதோ எண்ணியப்படி
நடந்தேன்
விரக்தியாய்
எதிப்பக்கம் திரும்புகையில்
பூத்திருந்தது
செடியில் எனக்கான
கவிதை
-கவிதாயினி ரம்யா
*

*
புன்னகை ஒப்பனையால்
மறைக்கமுயன்று
தோற்கிறேன்
ஏகாந்த ரணங்களின்
சோக வடுக்களைக்
காட்டிக்கொடுத்து விடுகின்றன
கண்ணீர்த்துளிகள்
-கவிஞர் தனபால்
*

*
தன் தலைமுடியைத்
தானே பற்றிக்கொண்டு
விடுவிக்கும் உபாயம்
அறியாமல்
வீறிட்டு அழும்
சிசுவைப் போல்
உன் நினைவுகளில் நானும்
-தனலெட்சுமி பாஸ்கரன்
*

*
யாரும்
பெயர்த்தெடுக்க முடியாதபடி
வாழ்க்கைச் சிலுவையில்
அறையப்பட்டுக் கிடக்கிறேன்
ஆணிகளாய்
உன் நினைவுகள்.
-கவிஞர் பாலாஜி
*

*
விலகியே இரு!
நெருங்கி வந்தால்
அழுதுவிடுவேன்
பழைய பேழைக்குள்
பதுக்கிவைத்திருந்த
பதட்டம் கூடிய
நினைவுகள் அழுக்காகிவிடும்.
விலகியே இரு!
இன்னும் சில காலம்
சுமந்து திரிகிறேன்
-கவிஞர் கிட்னப்பையன்
*

*
வெளிச்சத்திற்காய்
எரியத்தொடங்கிய
அந்தத் திரிகளைத்
தூண்ட விரல் தேடுகையில்
மெல்ல
இருள் பரவிக்கொண்டிருந்தது
விளக்கினைச்சுற்றிலும்
அடியிலும்.
-கவிதாயினி சத்யா
*

*
குழந்தையோடு
உறங்கும்
பொம்மையின் கனவில் வரலாம்
நிலாசோரூட்ட அம்மா
-கவிஞர் காயாதவன்

1 கருத்து:

  1. தமிழுக்கு ழ...
    கவிதைக்கு "புதிய ழ"...

    கவிதைகள் அனைத்தும் எனக்குள் கற்களாய் விழுந்து வரைந்து கொண்டிருக்கின்றன என் இதயம் முழுதும் அலையோவியங்களை!

    பதிலளிநீக்கு