வெள்ளி, 24 டிசம்பர், 2010

"அழுத பிள்ளைக்கு அமுதம் "-"விமர்சித்தவர்களுக்கு விருது "2010

விருதுகள் என்பவை பெரும்பாலும் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களை பாராட்டி கெளரவிக்கும் ஓர் அற்புதமான பொக்கிஷம்.ஒரு கலைஞன் வாழும் காலத்திலேயே பாராட்டப்படுகிற பொழுது அந்த கலைஞன் மரிப்பதற்கும் முன்பதாக ஒரு மகா கலைஞனாக மாறிவிடக்கூடும் .வாழும் காலத்தில் செய்யப்படாத மரியாதைகள் எந்தக் கல்லறைகளையும் கெளரவிப்பதால் பயனென்ன ?

ஆகவேதான் நல்ல கலை இலக்கியக்கூறுகளை ஆக்கப்படுத்தி ஊக்கப்படுத்த விருதுகள் துணை நிற்கின்றன.மேலும் விருதுகளில் மூலம் நல்ல நூல்களையும் நல்ல படைப்பாளர்களையும் அடையாளம் காணமுடியும்.அப்படிப்பட்ட விருதுகளில் ஒன்றுதான் சாகித்திய அகாதமி விருது, இது இந்திய அளவில் இலக்கியத்திற்காக வழங்கப்படுகிற உயரிய விருதாகும்.

நாஞ்சில் நாடன்...
நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் நாற்பது ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டுவரும் புத்திலக்கியப் படைப்பாளர்களில் நாஞ்சில் நாடன் குறிப்பிடத்தக்கவர் .இவர் 1947-ன் இறுதி நாளில் பிறந்தார் .இவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் , தோவாளை வட்டத்தில் , வீரநாராயண மங்கலம் பிறந்த ஊரில் . தகப்பனார் கணபதியா பிள்ளைக்கும் தாயார் சரஸ்வதி அம்மாளுக்கும் வாரிசாக அவதரித்தார்.

மாற்றுப் பணி ஒன்றில் முழுநேர ஊழியராக பணியாற்றும் இவர் தன் எழுத்துப் பணியையும் முதன்மையானதாகவே கருதினார்.வாழ்வியல் எதார்த்தங்களை தன் எழுத்துக்களில் ஏற்றி புத்திலக்கியங்களை உயிர்ப்புடன் உலவ விட்டார்.

ஆறு நாவல்கள்(சதுரங்கக் குதிரைகள்,என்பிலதனை,எட்டுத்திக்கும் மதயானை), எட்டு சிறுகதைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுதி, நான்கு கட்டுரைத் தொகுப்புகள் தமிழுக்கு இவரது கொடை. பல சிறுகதைகள் பன்மொழிகளில் பெயர்க்கப்பட்டவை.'எட்டுத் திக்கும் மதயானை' என்கிற இவரது நாவல், ஆங்கிலத்தில் 'AGAINST ALL ODDS' என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

முதல் நாவல் 'தலைகீழ் விகிதங்கள்',தங்கர் பச்சானின் இயக்கத்தில் 'சொல்ல மறந்த கதை' என திரைப்படம் ஆனது.மாணவர்கள் பலர் இவரது படைப்புகளில் M.Phil., Ph.D., ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர். இவரது நாவல்கள், பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

குடும்பத்துடன் கோவையில் வசித்து வரும் இவர் பெயர்தான் நாஞ்சில் நாடனே ஒழிய உண்மையில் இவர் ஒரு முழுமையான கோவை நாடன்தான். கணிதத்தில் பட்ட மேற்படிப்பு படித்தவர். மகள் டாக்டர் சங்கீதா மருத்துவத்தில் மேற்படிப்பு பட்டமும், மகன் கணேஷ் பொறியியல் கல்வியில் பட்டமும் பெற்றவர்கள்.

இந்திய இலக்கிய உலகில் உயரியதாகக் கருதப்படும் சாகித்ய அகாடெமி விருது, எழுத்தாளர் நாஞ்சில் நாடனுக்குக் கிடைத்துள்ளது.எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் 'சூடிய பூ சூடற்க' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு நடப்பு ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007 ஆம் தமிழினி பதிப்பகம் மூலம் 160 பக்கங்களில் வெளியான இந்தத் தொகுதி, 12 சிறுகதைகளை உள்ளடக்கியது. இது, 2009-ல் மறுபதிப்பு கண்டது

கோவையில் ஆ.மாதவனுக்கு நிகழ்ந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் அமைப்புசார் விருதுகளின் அரசியல் பற்றிக் கோவை ஞானியும்,நாஞ்சிலும் கடுமையாகக் கொட்டித் தீர்த்து 24 மணி நேரம் கழிவதற்குள் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது அழுத பிள்ளைக்கு பால் என்பதைப் போல ,கடுமையாக விமர்சித்தால் அகாதமி விருது கிடைக்கும் என்ற தவறான அடையாளத்தை அகாதமியின் மீது ஏற்படுத்துகிறது

ஒரு அரை நூற்றாண்டு காலம் தமிழ் இலக்கியத்திற்காக அற்புதமான பங்களிப்பை அளித்த நாஞ்சில்நாடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருதினை காலம்கடந்து செய்யப்பட்ட மரியாதையாகத்தான் கொள்ளமுடியும் .

புத்திலக்கியங்களும் அதிலும் குறிப்பாய் கவிதை இலக்கியங்களும் வெகுவாக புறக்கணிக்கப்படுகிற இன்றைய தமிழ் சூழலில் ,இது போன்ற விருதுகளின் அமைப்புக்குழுவில் இருப்பவர்களில் நவீனப் படைப்பாளிகள் மிகுதியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுதல் இந்த அரசின், அந்த அமைப்பின் தலையாய கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக