செவ்வாய், 28 டிசம்பர், 2010

'தகிதா' கவிதைச்சிற்றிதழ்

தமிழுக்கு சிறப்பு ழ, கவிதைக்கு புதிய ழ என்று குவலயத்து தமிழர்களின் நல் ஆதரவைப் பெற்று வந்த 'புதிய ழ' என்னும் கவிதை இதழ் பெயர்மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் நேர்ந்ததால் 'தகிதா' புதிய பெயரை அறிவிக்க கடமைப் பட்டுள்ளோம் .புதிய ழ என்ற பெயர் முன்னதாகவே பதிவு செய்யப்பட்ட பெயராக இருந்ததுள்ளதை எமது பதிவு கடித்தை மறுக்ககப்பட்டதலிருந்து சமீபத்திலேயே அறிந்துகொண்டோம்.புதிய ழவுடன் இணைந்து பதிப்புலகில் காலடி எடுத்து வைத்து முதல் வெளியீட்டிலேயே பதிமூன்று நூல்களை கொணர்ந்த 'தகிதா' என்ற பெயர் பொருத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் கைகளில் இந்த வருடத்தின் இறுதி இதழை தவழ விட்டிருக்கிறோம்.
இந்த கவிதைச் சிற்றிதழைத் தொடங்கி ஒருவருடம் முடிந்து விட்டதை நினைக்கும் போது நிறைவாக இருக்கிறது. தமிழகம் முழுக்க ஏன் தரணி முழுக்க பல படைப்பாளர்களை அடையாளப்படுத்திய பெருமிதமும் நெஞ்சில் நிறைகிறது. அப்படி கவிதைப் படைத்த சில படைப்பாளர்களின் நூல்களைத் தகிதாவின் மூலம் வெளிக்கொண்டு வந்ததை ஊடக உலகில் ஒரு மைல் கல்லாக கருதுகிறோம்.படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் பாராட்டும் ஊக்கமும் வாழ்த்தும் விமர்சனமும் கண்டனங்களும் இப்படியாய் எல்லாமும் எங்களை சிறப்பாக இயங்க வைத்திருக்கிறது.
வானம்பாடிகள் கவிதைத் தமிழ் வளர்ந்த இந்த கொங்கு மண்ணில் இரண்டாம் தலைமுறைகளாக இருக்கும் நாங்கள் கன்னித்தமிழையும் கவிதைத் தமிழையும் வாழ்வாங்கு வாழவைப்போம்.அந்த வானம்பாடி கவிஞர்களுக்கு வணக்கங்களையும் புதிய வானம்பாடிகளுக்கு வாழ்த்துக்க்களையும் தெரிவிப்பதில் பேருவகைக் கொள்கிறோம் .
கலைகளின் அரசியாக விளங்கும் கவிதை,பதிப்பகங்களால் புறக்கணிக்கப்படுவதும் நூலகங்களால் அனுமதி மறுக்கப்படுவதும் புத்திலக்கியத்திற்கு நேர்ந்திருக்கிற மிகப்பெரிய பின்னடைவாகும்.கவிதையின் இருண்டகாலமாக இருக்கும் இத்தகைய இலக்கிய சூழலில் கவிதைக்கு செய்வதன் மூலம் தமிழுக்கும் ஏதாவது செய்துவிட முடியும் என்ற நம்பிக்கைதான் எங்களை இடைவிடாது இப்படி வியர்வை சிந்த வைத்திருக்கிறது.
கடந்த ஒருவருட காலமாக கவிதை இதழ் சிறப்பாக வெளிவருவதற்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த எம் ஆசிரியர் குழுவினருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முத்தமிழ் முத்தங்களுடன்
போ. மணிவண்ணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக