வியாழன், 23 டிசம்பர், 2010

"என் தற்கொலை எண்ணத்தை தற்கொலை செய்தது ஒரு நூல்" - நீதியரசர் மாண்புமிகு கர்ப்பகவிநாயகம்

"மனித மாண்புகளும் தன்னம்பிக்கையும் " என்ற நெறிகாட்டு விழா ஒன்றில் நீதியரசர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.நல்ல நூல்கள் மரணத்தைக் கூட வென்றெடுக்கும் ஆற்றல் பெற்றவை.

இப்படித்தான் தேவகோட்டையில் பிறந்த ஒரு இளைஞர் தற்கொலைக்கு முயன்ற ஒரு சமயத்தில் நூலகம் ஒன்றிற்கு சென்று இறுதியாய் உறுதியாய் ஒரு நூலை படித்து முடிப்பது என்று முடிவெடுத்திருந்தான்.அவனின் இறுதி விருப்பின் படியே ஒரு நூலை எடுத்து படிக்கத்தொடங்கினான்.நூல் பெரிதாக இருந்ததால் வாசிக்க நாட்கள் கூடுதலாக தேவைப்பட்டிருக்கின்றன.முதலில் உள்ள அத்தியாயங்கள் அவனிடம் பெரிய பாதிப்புகள் எதையும் ஏற்படுத்தவில்லை.

இனி சாவது என்று முடிவெடுத்தபோது இறுதியில் சில அத்தியாயங்களை படித்து முடிக்கவேண்டும் என்ற ஆர்வம் அவனுக்கு மேலிட்டிருக்கிறது. நூலின் இறுதி அத்தியாயங்களை படித்து முடித்ததும் தாம் எண்ணியதைப் போல தற்கொலையை உறுதியாய் எண்ணியபடி முடித்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருந்ததுள்ளது .

இறுதியில் உள்ள பக்கங்கள் தீரும் நிமிடங்கள் நெருங்கவே தீராத வாசிப்புக்கும் தீர்ந்து போக இருக்கிற சுவாசிப்புக்கும் பலப்பரிச்சை நிலவியது.அந்த இளைஞன் தன் இறுதி ஆசையாய் வாசித்துக்கொண்டிருந்த அந்த நூலை படித்து முடித்ததும் இனி தற்கொலை செய்யக்கூடாது என்று முடிவெடுத்தான்.

அப்படியாய் ஒருவனின் மரணத்தைக்கூட மரணிக்கச் செய்த நூல் 'மகாத்மா காந்தியின் சுயசரிதை' அந்த இளைஞன் பிற்காலத்தில் பெரிய நீதிபதியாக உயர்ந்தான் .அவன்தான் இந்த கர்ப்பக விநாயகம்.(இப்படியாய் அவர் சொன்னதும் அவையினர் தங்களை மறந்து அவருக்கும் கரகோஷங்களால் இடைவிடாது மரியாதை செய்தனர்.கைத்தட்டல் சுமார் இரண்டரை நிமிடங்கள் நீடித்தன )
.

கர்வம் கொண்டால் கடவுளை இழப்போம்;பொறாமைக் கொண்டால் நண்பனை இழப்போம்;கோபம் கொண்டால் நம்மையே நாம் இழக்க நேரும். படிப்பு எவ்வளவிற்கு ஒருவனுக்கு அறிவைத்தருகிறதோ அந்த அளவிற்கு அடக்கத்தையும் தரவேண்டும்.கர்வம் கொண்ட ஒருவனிடம் இறைவன் ஒருபோதும் தங்கி இருக்க சம்மதிப்பதில்லை.ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே இருக்கும் இறைவன் அவன் கர்வம் கொள்ளும் போதுதான் வெளிநடப்பு செய்கிறான். அருமைத் தோழர்களே என்றைக்கு நீங்கள் உங்கள் பலவீனங்களை அறிந்தவர்கள் ஆகிறீர்களோ அன்று முதலே நீங்கள் பலசாலிகள் ஆகிறீர்கள்.

மகிழ்வின் விதைகளை இதயத்தில் விதைத்து அதை முகத்தில் மலர்த்தவேண்டும். மகிழ்ச்சி இல்லாத முகம் மயானம் போன்றது.முகத்தில் தவழும் புன்னகை நல்ல இதயத்தின் பிரதிபலிப்புதான்.வாழ்க்கை ஒரு சவால்,சாகசம்,அழகு,சரித்திரம்,அதில் உங்கள் விதியை பொசுக்கி சம்பலாக்க வேண்டும். அந்த விதியை பொசுக்கி சாம்பலாக்க உண்மை ,உழைப்பு, ஊக்கம், உயர்வு, மற்றும் இறைநம்பிக்கை போன்றவை உறுதுணையாய் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக